ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ.1,400 ஆக உயர்ந்துள்ளதுடன், காய்கறி விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முட்டைக்கு விலை நிர்ணிப்பது தொடர்பாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கமும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும், நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பின்னர் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது சந்தையில் முட்டை பல்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் முட்டைக்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று காலை அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தனர்.
இதற்கிடையில், ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை மேலும் அதிகரித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 1,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எதிர்காலத்தில் கோழிக்கறியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மரக்கறி சந்தையில் மலையக மரக்கறிகளான லீக்ஸ், கேரட், பீன்ஸ் போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
ஒரு கிலோ கேரட்டின் சில்லறை விலை ரூ.400 ஆகவும், பீன்ஸ் ஒரு கிலோ சில்லறை விலை ரூ.600 ஆகவும் உள்ளது.
ஒரு கிலோ மீன் மற்றும் மிளகாய் விலையும் 600 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ பாக்கு 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கம் குறிப்பிட்ட விலைக்கு கொள்வனவு செய்யாததால் அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இம்முறை நெற்செய்கைக்காக பாரியளவு செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமது நெற்பயிர்களை இடைத்தரகர்கள் இன்றி நிலையான விலையில் கொள்வனவு செய்யுமாறு பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையினால், இலங்கைக்கான அரிசியை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடைந்த அரிசி ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், ஏற்றுமதிக்கான அரிசி வகைகளுக்கு 20% சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உடைந்த அரிசியை இறக்குமதி செய்யும் சீனா, இலங்கை மற்றும் பல ஆபிரிக்க நாடுகளுக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.