சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறுகிறது .
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துக் கொள்கின்றனர் .
இந்த விடயத்தில் காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார் .
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் மன்னாருக்குப் பிரசாரத்துக்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதேச மக்களின் அனுமதியும், இணக்கமும் இல்லாமல் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என வாக்குறுதி வழங்கியிருந்தார் .
இந்நிலையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாள்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன .