மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில், போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டு, போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய, பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணியளவில், பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது, வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரியை, 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும், இவர் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனனர்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.