-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி வில்லுக்குளம் மற்றும் வட்டவான் வயல் அண்டிய பிரதேசங்களில் அனுமதியின்றி அகழப்படும் மணல் இன்று வியாழக்கிழமை இளைஞர்களினால் முறியடிக்கப்பட்டது .
மேற்படி தனியார்களுக்கு சொந்தமான வயல் காணிகள் மற்றும் மேட்டுநில காணிகளில் இரவு வேளைகளில் முறையற்ற விதத்தில் அனுமதி இன்றி உழவு இயந்திரம் மூலம் மணல் அகழப்பட்டு கிண்ணையடி வட்டவான் பகுதியில் மணல் களஞ்சிய சாலை அமைக்கப்பெற்று விற்பனை செய்யும் செயற்பாடு பல மாதங்களாக இடம்பெற்று வந்த நிலையில் குறித்த கிராமத்து இளைஞர்கள், சமூக மட்ட அமைப்புக்கள் இணைந்து குறித்த இடத்தினை சுற்றி வளைத்துள்ளனர்.
அனுமதி பத்திரங்கள் எதுவுமே இன்றி மணல் களஞ்சிய சாலையில் இருந்து உழவு இயந்திரங்களுக்கு மணல் ஏற்றி கொண்டு இருந்த போது இளைஞர்கள் அவ் இடத்தினை சூழ்வதனை கண்டு உழவு இயந்திரத்தினை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் இது தொடர்பில் கிராமத்து இளைஞர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களினால் பிரதேச செயலாளருக்கும், கிராம உத்தியோகஸ்தர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவல் அறிந்த பிரதேச செயலாளர் காணிபிரிவு உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, சம்பவத்தினை விசாரித்து இனிமேல் இவ்வாறன சம்பவங்கள் நடைபெறாது என்றும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
