மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சி.டி ஸ்கேன் இயந்திரம் ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
கம்யூட்டட் டோமோகிராபி (சிடி ஸ்கேன்) என்பது மருத்துவர்கள் உடல் பாகங்களை பார்ப்பதற்கு பயன்படும் ஒரு முறையாகும். இது எக்ஸ் கதிர்களை பயன்படுத்தி உடல் உறுப்புகள் எலும்புகள் மற்றும் பிற திசுக்களை படம் பிடித்து அதை கணினியில் ஏற்றுகிறது. இது எக்ஸ் ரே முறையை விட வளர்ச்சியடைந்த தொழில்நுட்பமாகும். மேலும் இது எக்ஸ் ரேவை விட அதிக விவரங்களை மருத்துவர்களுக்கு காட்டுகிறது.
இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த சிடி ஸ்கேன் இயந்திம் மட்டு போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்களுக்கு குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நோயாளர்களின் நோய்களை இனங்காண்பதற்கு முக்கியமானதொன்றாக காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளது.
குறித்த இயந்திரம் மூலம் பயன் பெற்று வந்த நோயாளர்கள் தற்போது தங்களது நோய்களை இனம்காண முடியாமல் திரும்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் தூர பிரதேசங்களில் இருந்து வருகை தரும் நோயாளர்கள் கூட இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த இயந்திரத்தின் கோளாறு காரணமாக நோய் நிலைமைகளுக்கு ஆளான நோயாளர்கள் உரிய நேரத்தில் தங்களது நோய்களை கண்டு பிடிக்க முடியாமல் நோய் நிலையின் தாக்கம் அதிகரித்து செல்வதற்கும் வாய்ப்பபுக்கள் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளதுடன் குறித்த இயந்திரத்தை திருத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சரியான தீர்வினை பெற்று கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
