மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டமானது வடக்கு கிழக்கு மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டிற்கமைய இவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக இடம்பெற்றது.
இன்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் காணப்படாத விடயங்கள் குறித்து சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கேள்வி எழுப்பி, அரச அதிகாரிகளுக்கு தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தினார்.
இதன்போது, அந்தத் தரவுகள் தற்போது தன்வசம் இல்லை என்றும் இன்று அவற்றை அமைச்சரிடம் கையளிக்க ஏற்பாடு செய்வதாகவும் செயலாளர் தெரிவித்தார். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளரிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி அவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கியதை தொடர்ந்து குறுக்கிட்ட ஆளுநர் தரவுகளை உடனடியாக எவ்வாறு வழங்க முடியும் என்றும் அவற்றை வழங்க ஏற்பாடு செய்யுமாறு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதனை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், இவ்வாறான உயர்ந்தபட்ச சபையில் அனைவரும் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியதுடன், அரச அதிகாரிகளின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் அரச அதிகாரிகள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை, அமைச்சர் நஸீர் அஹமட்டின் சுற்றாடல்துறை அமைச்சினூடாக கடந்த இரண்டு வாரங்களில் பாரியளவு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது என்றும் இதனால், சுற்றாடலுக்கும் பொது மக்களுக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இதனை வன்மையாகக் கண்டித்தார்.
மேலும், இரா.சாணக்கியனுக்கும் சி. சந்திரகாந்தனுக்கும் இடையில் வாய்தர்க்கங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் சாணக்கியனை ”போடா” என்று சந்திரகாந்தன் கூறியதை தொடர்ந்து அவர்களுக்கு இடையில் அமளிதுமளி ஏற்பட்டது.
கூட்டத்தின் இறுதி பகுதியில் விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பிலும் மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் கலந்துரையாடினார். மேலும் மட்டு. பூம்புகார் (உப்பு கராச்) பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களுடைய பிரச்சினை இரா.சாணக்கியன் மூலம் வெளிகொண்டுவரப்பட்டு அந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களால் மனு ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சிவநேதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், இரா.சாணக்கியன் ஆகியோரும், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.