-கல்முனை நிருபர்-
மட்டு, அம்பாறை மாவட்டங்களில் வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடிக் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வாகன சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது QR கோட் நடைமுறைக்கு ஏற்ப இங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பெற்றோல், டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் நீண்டகாலமாக நடமாடும் விற்பனை நிலையங்களை நடத்திவரும் பலர் மீண்டும் தங்களது தொழில் துறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட வியாபாரிகள் தங்களது வாகனங்களை வீதியோரங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நிறுத்திவிட்டு தமது விற்பனை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு செல்லும் போது, தருணம் பார்த்து காத்திருக்கும் எரிபொருள் திருடும் திருட்டுக்கும்பல்கள் அவ் வாகனங்களில் இருந்து லாபகமாக பெற்றோல் டீசல் ஆகியவற்றை திருடிச் செல்கின்றனர்.
இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதுடன் மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு, கல்முனை, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் அதிகளவிலானோர் தங்கள் எரிபொருளை பறிகொடுத்துள்ளதுடன் வாகனங்களின் உதிரிப்பாகங்களையும் இழந்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் தங்களது வியாபார நடவடிக்கையை சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுத்துவரும் நடமாடும் வியாபாரிகளிடம் எரிபொருளை திருடும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுக்கின்றனர்.