மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய பிரதேச சபை திண்மக்கழிவு அகற்றும் ஊழியரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
மாவடிச்சேனை எம்.பி.சீ.எஸ். வீதியில் அந் நபர் திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது அந்த வீதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கையடக்கத் தொலைபேசியும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஏனைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான ஊழியர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏனைய ஊழியர்கள் திண்மக்கழிவு அகற்றும் இயந்திரங்களை அந்த ஊழியர் தாக்கப்பட்ட வீதியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.