இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
“மூவின மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் – அழகான தேசம், அன்பான மக்கள்” எனும் தொனிப்பொருளில் காலை 10 மணியளவில் மாபெரும் சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மூவின மக்ககளின் பங்களிப்புடன் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாகவும், மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி ஊடகவும் இரண்டு வாகன பேரணிகள் காந்தி பூங்காவை வந்தடைந்து பிரதான அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் மற்றம் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் மூவின மத தலைவர்கள் உள்ளிட்ட மூவின மக்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் பியந்த பண்டாரவின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ்மாதிபர் எச்.சமுத்திர ஜீவ கலந்து கொண்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்