மட்டக்களப்பு கடல் பகுதியை ஒருவகை நண்டினமானது ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
முன்னைய காலங்களில் இது போன்ற நண்டு இனம் இரண்டு மூன்று தினங்களுக்கு மட்டும் கரையொதுங்கி கடற்தொழிலாளர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கும் என்றும் ஆனால் தற்போது இந்த நண்டினம் கரை ஒதுங்காமல் கடற்தொழிலாளர்கள் தொழில் செய்யும் கடலின் நடுப்பகுதிகளில் தொடர்ந்தும் காணப்படுகின்றதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி வலைகள் சேதமாக்கப்படுவதாகவும் தொழில் புரிய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் குடும்பத்தையும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளையும் பார்த்துக்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதன் காரணமாக இது போன்ற இன்னல்களுக்கு மத்தியிலும் கடற்தொழிலாளர்கள் பெரும் பாடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கின்றனர்.