-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கமநல பிரிவிக்குட்பட்ட பெரும்போக வேளாண்மை செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான உரமானிய கொடுப்பனவு இதுவரையும் வழங்கப்படவில்லை, இதனால் பெரும்போக செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த போகத்தின் போதும் உரிய காலத்தில் உர வவுச்சர் வழங்கப்படாமையினாலும் விவசாயிகள் பணம் கொடுத்து தனியார்களிடம் இருந்து பெற்று கொண்டு கடந்த சிறுபோகத்தினை கடத்தினார்கள்.
இம்முறை பெரும்போகத்தில் உரிய காலத்தில் உரமானிய வவுச்சர் தங்கள் வங்கி கணக்குகளுக்கு வைப்பிடப்படும் என விவசாயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அறிவித்தாலும், இதுவரைக்கும் உரத்துக்கான கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை எனவும் தங்களின் பயிர்கள் போதிய வளர்ச்சி இன்றி காணப்படுகின்றது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய செய்கைக்கான ஆரம்பகூட்டம் கடந்த வருடம் 9ம் மாதம் கிரான், வாகரை மற்றும் செங்கலடி பட்டிப்பளை பிரதேசங்களில் இடம்பெற்று 10ஆம் மாதத்திலிருந்து விதைப்புகள் ஆரம்பிக்கப்பட்டது, இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்னும் தங்களுக்கான உர மானிய கொடுப்பனவுகள் இன்னும் இல்லை.
அத்துடன் அரசினால் ஒரு ஹெக்டயருக்கு 15000 ரூபாய் தருவதாக கூறினாலும், தனியார் கடைகளில் ஒரு யூரியா மூடையின் விலை 8400, 8200 ரூ பாய்க்கு விற்பனையாகின்றது.
நகைகளை அடகு வைத்து, கடன்களை பெற்று பசளைகளை கொள்வனவு செய்து வேளாண்மை பயிர்களுக்கு போட்டாலும் அறுவடையின் பின் நெல்லுக்கு விலை இல்லை இதனால் தாங்கள் நஸ்டத்தினை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.