மட்டக்களப்பில் மட்டும் 80 சதவீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சியிலிருந்த போதும் மக்கள் சேவை செய்ய எமக்கு உதவிகளை வழங்கினார். இவை தொடர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்.
மட்டக்களப்பில் மட்டும் 80 சதவீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிப்பர். பொலிஸார் கைப்பற்றியிருந்த பாடசாலை காணியை விடுவித்து தந்தார். இன பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தலைவருக்கு இடமளிக்க வேண்டும்.
கொவிட் காலத்தில் ஜனாசா விவகாரத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு நட்டஈட்டுத் தொகையொன்றை வழங்குவதாகவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார். கேஸ் சிலிண்டர், மருந்து, எரிபொருள் தட்டுப்பாடு என எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தந்த ஜனாதிபதிக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன்,மௌலவி காஸிம் மற்றும் பிரதேச இளைஞர் யுவதிகளான ரசீதா மற்றும் சாஜித் ஆகியோரும் உரையாற்றியதோடு ஏறாவூர் வர்த்தக சங்கச் செயலாளர் வை.எல்.சலீம்,மட்டக்களப்பு ஐக்கிய தேசிய கட்சி தொகுதி தலைவர் ஏ.எல்.ஏ. பிர்தௌஸ், உள்ளிட்ட பிரதேசய அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்தக் கூட்டத்தில் இணைந்து கொண்டார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்