மட்டக்களப்பில் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்!

கிரான் நிருபர்.

 

மகாவலி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சற்தரை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாநிதி பத்மராஜா  ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரம் ஆகியோரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது மகாவலி அதிகார சபை மற்றும் மேச்சற்தரை தொடர்பிலான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது எதிர்வரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னர் விசேட கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து இது தொடர்பில் ஆராய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மகாவலி அதிகார சபையின் எல்லைப் பரப்புகள் மற்றும் அதன் செயற்பாடுகள், எவ்வாறான செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது தொடர்பாகவும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மகாவலி அதிகாரசபையின் வீ பிரிவிற்கான வதிவிட திட்ட முகாமையாளர் இந்திக்க ரணவீர கருத்து தெரிவிக்கையில்,

இனிவரும் காலங்களில் மகாவலி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு திட்டம் தொடர்பாகவும் முடிவுகளை மேற்கொள்ள முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு, பிரதேச ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பின்பற்றியே தமது திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக இதன் போது தெரிவித்திருந்தார்.

அத்தோடு மகாவலி காணிகளை வனவள திணைக்களத்திற்கு வழங்கப்படுவது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம், மாவட்ட அரசியல் பிரதிநிதிகளிடம் தெரியப்படுத்தி அவற்றின் பிரகாரம் முடிவுகளை எடுப்பது தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மகாவலிக்கு உட்பட்ட வயல் காணிகள் தொடர்பாகவும், சூரிய மின் உற்பத்தி மேற்கொள்வதற்கான காணிகளை விடுவிப்பு செய்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இவை தொடர்பிலான இறுதி தீர்மானம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்னெடுக்கப்படுமென இரண்டு இராஜாங்க அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், இராஜாங்க அமைச்சர்களின் ஒருங்கிணைப்பாளர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், மகாவலி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.