மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை கவனத்தில் எடுக்காது தள்ளி வைத்து கொண்டு வந்ததுடன் தற்போது அவர்களை பற்றிய விடயங்களுக்கான தலைப்பை கூட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இருந்து நீக்கி விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த ஆர்பாட்டமானது இன்று காலை காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி நடைபவனியாக மாவட்ட செயலகம் வரை சென்று புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முறளிதரனிடம் பண்ணையாளர்களால் மகஜரும் சமர்ப்பிக்கப்பட்டது.
மாட்டு பொங்கல் தினமான இன்றைய நாளை தாங்கள் தங்களது மாடுகளை இழந்த பண்ணையாளர்காக கறுப்பு பொங்கலாக அனுஷ்டிக்கும் முகமாக வெறுமையான பொங்கல் பானைகளில் கறுப்பு துணி கட்டி அவற்றை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









