-மட்டக்களப்பு திருபர் –
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்று சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் மட்டக்களப்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து அங்கு தங்கியிருந்ததாகவும் , பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போலின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன் , பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.