-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-
மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் உட்பட பத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் ஊறணி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பேருந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த பேருந்தில் இருந்து கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மட்டக்களப்பு மத்தியஸ் வீதியில் அண்ணாச்சி என்று அழைக்கப்படுபவரின் வீட்டை சுற்றிவளைத்த போது வீட்டின் மலசல கூடத்திலிருந்து ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டிலிருந்த பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



