மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தில் சந்தேகத்துக்கு இடமாக பயணித்த சிறுமி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுமியின் தாயார் வேலை வாய்ப்பு பெற்று வெளி நாடு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிய குறித்த சிறுமி கல்முனையில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கிவிடுவதற்காக பேருந்து வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது தனியாக பயணித்த குறித்த சிறுமி மீது சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் படி குறித்த சிறுமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது குறித்த சிறுமி ஏற்கனவே இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இவரை சிறுவர் இல்லத்தில் சேர்ப்பித்துள்ளதாகவும் பின்னர் தந்தை, தான் பராமரிப்பதாக பொறுப்பேற்று அவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் அண்மையில் புத்தளத்திலுள்ள அவரின் மாமியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளதாகவும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்று வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்காக நீதிமன்றில் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.