தமிழ் கட்சிகள் அனைத்தும் பதவி பட்டங்களை துறந்து ஒரு குடையின் கீழ் அணி திரண்டு எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் எங்களுடைய பலவீனங்களை எதிரிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என கருணா அம்மான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடி குவாட்டஸ் லேன் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை செயலகம் திறப்பு விழா கருணா அம்மான் என்றும் அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனினால் திறந்து வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒருபோதும் நாங்கள் மொட்டு கட்சியுடன் சேர்ந்து எதிர்காலத்தில் பயணிக்கும் நோக்கம் இல்லை. ஜனாதிபதி உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்திருக்கிறோம். எனினும் நாங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. எனக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் அவரை சரியாக பயன்படுத்தி நமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
மயிலத்தமடு மக்களின் பிரச்சினையை இங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கம் கருதி தனி தளியாக ஜனாதிபதியை சந்தித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வதாலேயே அவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை மாறாக அனைவரும் ஒருங்கிணைந்து ஜனாதிபதியிடம் பேச்சுவார்தை நடாத்தினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியும் என தெரிவித்தார்.
நிகழ்வின் போது கட்சியின் உறுப்பினர்கள் உட்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டதுடன் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பொது மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.



