மட்டக்களப்பு நகரில் அதிகளவான இரசாயனம் கலந்த பழச்சாறுகளை விற்பனை செய்த கம்பனி உரிமையாளர், விற்பனை முகவர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அரசடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பழச்சாற்றின் சுவையில் அதிகளவு இரசாயனத்தன்மை இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகளிடம் பொது மக்களால் முறையிடப்பட்டதையடுத்து குறித்த விற்பனை நிலையத்தை கடந்த ஒக்டோபர் மாதம் முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி கடை உரிமையாளர், விற்பனை முகவர், உற்பத்தி கம்பனி உரிமையாளர் உட்பட 3 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததுடன், கைப்பற்றப்பட்ட பழச்சாறு போத்தல்களின் மாதிரிகளை கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், பழச்சாறுகளை இரசாயன பகுப்பாய்வினர் பரிசோதித்ததன் பிரகாரம் அதில் பென்சோயிக் அமிலம், சல்பர்டை ஒக்சைட், ஆகிய கலவைகளின் உள்ளடக்கம் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும், இது மனித பாவனைக்கு உதந்தது அல்ல என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த வழக்கு வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது வழக்கின் 2,ம் 3ம் பிரதிவாதிகளான கம்பனி உரிமையாளர் மற்றும் கம்பனி முகவர் இருவருக்கும் தலா ஒரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் இருவரையும் 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும் குறித்த பழச்சாறு போத்தல்களை விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து உடனடியாக கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் உத்தரவிட்டார்.