மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் ஒன்று கூடல் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையில் ஜனநாயக பங்குதாரர்கள் ஒன்றினைந்த மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் என்ற செயல் திட்டத்தின் கீழ் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வினை அகம் மனிதாபிமான வள நிலையம்  என்ற அரசசார்பற்ற நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய 3 தரப்பினரையும் ஒன்றினைத்து வாகரை பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மத்திய அரசாங்கம் மற்றும் பிரதேச சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

இதில் குறிப்பாக கதிரவெளியில் அமைக்கப்படவுள்ள இல்மனைற் தொழிற்சாலை, இறால் வளர்ப்பு பண்ணை, காணி அபகரிப்பு, மணல் அகழ்வு, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, இளவயது திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையான சுருக்கு வலை பாவித்து மீன் பிடித்தல், வேலைவாய்ப்பு, என்பன போன்ற பல்வேறு விடயங்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பிரதேச சபை தொடர்பான விடயங்களான குடி நீர் பிரச்சினை, வீதி அமைத்தல், தெரு மின் விளக்குகள் பொருத்துதல், மலசல கூடவசதி , யானைக்கான வேலி அமைத்தல், மக்கள் விரும்பாத வியாபார நடவடிக்கைக்கு அனுமதிபத்திரம் வழங்குதல், போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது கலந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தனர். வாகரை பிரதேச சபைக்கு போதுமான வருமானம் குறைவு, நிதி வளம் இல்லாமை, நிதி ஒதுக்கீடு போதாமை போன்ற காரணங்களினால் சில வேலைத்திடப்பணிகளை முன்னெடுக்கடுமுடியாமல் உள்ளதாகவும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு சபை நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும், தற்போதைய நாட்டின் பொருளாதார சூழ் நிலையும் தாக்கம் செலுத்துவதாக கருத்து தெரிவித்தனர்.

பிரதேச சபை உறுப்பினர்களை சில அரச திணைக்களங்கள் மற்றும் பொலிஸார், மதிப்பதில்லை என்று தமது கோரிக்கையினை முன்வைத்தனர்.

பிரதேச சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் அவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும், அதன்போதுதான் மக்களுக்குரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வருவார்கள் எனப்பட்டது.

முன்வைக்கப்பட்ட திட்ட முடிவுகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் பிரதேசத்தின் பிரச்சினைகளை ஆவண வடிவில் தொகுத்து எழுத்துருவில் தயாரித்து துறைசார்ந்த திணைக்களங்களுக்கு சமர்ப்பித்து தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் துறைசார்ந்த திணைக்களங்களைக் கொண்டு கலந்துரையாடல்களை மேற்கொள்வது, மாதாந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளல், வாகரை பிரதேசத்தில் மாற்றத்திற்கான சிவில் அமைப்புக்கள் இணைந்த குழுக்கல் செயற்படல், ஊடகத்துறையில் விருப்பமுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களை உருவாக்கல், காணி தொடர்பான தெளிவு வேண்டும், அரச அதிகாரிகள் மக்களுடன் இணைந்து செய்ற்படுவதற்கான தெளிவினை ஏற்படுத்தல், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த குழுவொன்று செயற்பட வேண்டிய தேவை உள்ளது கூறப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள்,  சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுகராசா, பிரதி இணைப்பாளர் அ.மதன் மற்றும் திட்ட உத்தியோகத்தர் எஸ்.கிருசாந்  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.