போதைப்பொருள் வியாபாரிக்கு தடுப்புக்காவல் உத்தரவு
வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
37 வயது மதிக்கத்தக்க வட்டுக்காய் என செல்லமாக அழைக்கப்படும் இச்சந்தேக நபர் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய செயற்பட்ட சாய்ந்தமருது பொலிஸார் சந்தேக நபர் ஒரு தொகுதி போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை அளவீடு செய்யும் தராசு, பைக்கற் செய்யும் பொலித்தீன், கத்திரிக்கோல் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் நீண்ட காலமாக போதைப்பொருட்களை பதுக்கி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரை மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது பகுதிகளில் அதிகளவான போதைப்பொருள் கடத்தல்கள் சூட்சமமாக நடைபெற்று வருவதுடன் பொலிஸார் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபரை கைது செய்ய 5க்கும் மேற்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் மேற்பார்வையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
