திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பாலத்தோப்பூர் கிராமப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், காட்டு யானைகள் உட்புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சம்பவத்தின் போது, கிராமத்தில் அமைந்திருந்த நெல் கடையொன்றை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கிருந்த நெல் மூட்டைகளையும் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடையில் இருந்த உபகரணங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்கு அப்பால், பாலத்தோப்பூர் கிராமத்தில் உள்ள சில வீடுகளின் வளாகங்களில் காணப்பட்ட தென்னை மற்றும் வாழை மரங்களும் யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இவ்வாறான யானை அட்டகாசங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதுடன், கிராமத்திற்குள் புகுந்துள்ள யானைகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோப்பூர் – பாலத்தோப்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


