போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடொன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து இளந்தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நாட்டின் இளைஞர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக கிராமிய மட்டத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்துக்கு இணையாக , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு,பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஜூன் 26 ஆம் திகதி இந்த இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
போதைப்பொருள் அபாயத்திற்கு ஆளாவதன் காரணமாக, நாட்டின் இளந்தலைமுறையினர் பாரியளவில் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார ரீதியான வீழ்ச்சிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது நாட்டின் உழைக்கும் படையின் உற்பத்தித்திறனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இந்த அபாயத்தை நாட்டிலிருந்து வேரோடு ஒழிப்பதற்கும், இளைஞர்களை அதிலிருந்து மீட்பதற்குமான அரசாங்கத்தின் பிரதான திட்டமாக ” முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாட்டின் திட்டங்கள் மற்றும் முதற்கட்ட ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.