கல்கிஸ்ஸை பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரத்மலானை மற்றும் பிலியந்தலை அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 16 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாறைகள் நிறைந்த கடலோர பகுதியில் குடிபோதையில் சிலர் பாதுகாப்பற்ற முறையில் நீராடுவதாக கல்கிஸ்ஸை பொலிஸ் கரையோர பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில், பாதுகாப்பற்ற இடத்தில் 6 பேர் குளித்துக்கொண்டிருந்தமை தெரியவந்தது.
அந்த இடம் குளிப்பதற்கு பாதுகாப்பற்றது என எச்சரித்து மக்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் சென்ற போது, குறித்த குழுவினர் பொலிஸாரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.