பொத்துவில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்க கூடாது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் குரலெழுப்பினார்.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி அங்கிருக்கும் பொது அமைப்புக்கள் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
அங்கு மதுபானசாலை அமைவதை தான் வன்மையாக எதிர்ப்பதாகவும், குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிருந்து 200 மீட்டருக்குட்பட்ட பிரதேசத்தில் பாடசாலைகள், பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், ஜும்மாபள்ளிவாசல், வைத்தியசாலை, நீதிமன்றம், பாலர் பாடசாலை என்பன அமைந்துள்ளது. அங்கு மதுபானசாலை அமைந்தால் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் மதுபானத்திற்கும் நிறைய பணத்தை ஒதுக்கி சீரழிவர்.
பொத்துவில் பிரதேசம் சுற்றுலாத் துறைக்கான இடமென்பதால் கொஞ்சம் தள்ளி ஐந்துக்கு மேற்பட்ட மதுபானசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்திடம் அந்த மதுபானசாலைக்கான அனுமதியை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இப்போது முன்னெடுத்து வருகிறது. அதனிலிருந்து அரசாங்கம் விடுபட்டு நாட்டை முக்கியமான துறைகளை முன்னேற்ற தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.