-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பொது வைத்தியசாலையின் கவனயீனத்தால் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்த சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி நாலாம் வட்டாரத்தில் வசித்து வந்த இஸ்ஸதீன் முஹம்மட் தஸ்லீம் (29வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர்.
குச்சவெளி தனியார் தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் குறித்த நபருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த நபர் தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய வயிற்று வலி குணமடையாத நிலையில் நிலாவளி பிரதேச வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்று வலி குறையாத காரணமாக, மேலதிக சிகிச்சைக்காக இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அழைத்து வரப்பட்டார்.
இதனை அடுத்துஇ திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த கடமை நேர வைத்திய அதிகாரி குறித்த நோயாளியை 17 ஆம் வாட் (களம்) சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனாலும்இ குறித்த நோயாளிக்கு அருகில் உயிரிழந்தவரின் சகோதரர் இஸ்ஸதீன் சியாம் தனது சகோதரர் வயிற்று வலி காரணமாக துடி துடிப்பதாகவும், அவரை உடனடியாக பார்க்குமாறும் தாதியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும்இ கடமையிலிருந்த வைத்தியரும், தாதியர்களும் குறித்த நோயாளியை பார்வையிடவில்லை எனவும், அதே நேரம் இன்று காலை ஆறு மணியளவில் குறித்த நோயாளியை பார்வையிட வருகை தந்த சக நண்பர் குறித்த நோயாளி மயக்க முற்று இருப்பதாக தாதியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, குறித்த நோயாளியை விரைவாக பார்த்துவிட்டு மூச்சு வேலை செய்கின்றதா என்பதை அவதானித்த பின்னர் குறித்த நோயாளி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதிலும், நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பப்பட்ட நோயாளி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் உடனடியாக 17 ஆம் வாட்டுக்கு அனுப்பி அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அவருடைய உயிர் பிரிந்தமைக்கு வைத்தியசாலை நிர்வாகமே காரணம் எனவும் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்து நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் தமக்கு நியாயமான முடிவைப் பெற்றுத் தருமாறு, உயிரிழந்தவரின் மனைவியும், ஒரு பிள்ளையின் தாயாருமான பாத்திமா சஹ்ரா கோரியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இம்மரணம் தொடர்பில், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கேட்டபோது, தாம் சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.