கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பெண் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை காலை சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் மூலம் வைத்தியசாலைச் சேவைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தியதையடுத்து, குறித்த வைத்தியருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது பெண் கனிஷ்ட ஊழியர் ஒருரை அவர் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையின் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணரின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி, ஜூனியர் பெண் ஊழியர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.