2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடு முழுவதும் 2ஆயிரத்து 787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது., பரீட்சையில் 3இலட்சத்து 07ஆயிரத்து 951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர்.
நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் தொடர்பில் பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.
மாணவர்களுக்கு தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின் குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மாத்திரமே என்றும் இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக இந்த சிறு பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வாய்ப்பளிக்க வேண்டும்என்றும் பிள்ளைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகிறார்கள்
என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.