இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசாருக்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இந்நிகழ்வு நடைபெற்றதுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் கலந்துரையாடல் ஒன்றினை பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்களுடன் மேற்கொண்டார்.
இதன் போது அங்கு கருத்து தெரிவித்த புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர்,
எமது இலங்கை பொலிஸ் பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலுக்கமைய ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தில் உள்ள சமூக பொலிஸ் பிரிவுடன் ஆலோசனைக்குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது தவிர கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை, வீடு உடைப்பு, உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் உரிய தகவல்களை மக்கள் ஊடாக சரியாக கிடைக்கப்பெற்றால் அவ்வாறான பிரச்சினைகள் உடனடியாக எம்மால் தீர்க்க முடியும்.
பொலிஸ் ஆலோசனை குழு கூட்டங்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீழ் நடைபெற வேண்டும். இவ்வாறான குழுக்கள் ஊடாக பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை பொலிஸ் முன்னெடுத்துள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகல மக்களுக்கும் பணியாற்ற ஆவலாக வந்திருக்கின்றேன். அத்துடன் கல்முனை சமூக பொலிஸ் பிரிவுடன் இணைந்து ஆலோசனை குழு சரியான வினைத்திறனுடன் இயங்குவதை தற்போது என்னால் காண முடிகின்றது. எனவே பல்வேறு செயற்திட்டங்களை இக்குழுவின் ஊடாக முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன் என்றார்.