இராணுவத்தால் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்த வழக்கில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ சதிப்புரட்சி செய்த குற்றத்துக்காக 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் , உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்த தண்டனையை அறிவித்துள்ளனர்.
2022 தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தன்னை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சதித்திட்டத்தை முன்னெடுத்ததாக ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
தோல்வியைத் தொடர்ந்து தேர்தல் முடிவை நிராகரிக்க நாட்டில் கொந்தளிப்பான ஒரு இயக்கத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது, நாட்டின் ஜனாதிபதியாக சில்வா பதவியேற்ற ஒரு வாரத்துக்குப் பின்னர் , ஜனவரி 2023இல், தலைநகரான பிரேசிலில் வன்முறை கலவரங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
போல்சனாரோ ஆதரவாளர்களால் அரசு கட்டிடங்கள், ஃபெடரல் நீதிமன்றம், நாடாளுமன்றம் என தாக்குதலுக்கு இலக்கானது. ஆனால் இந்த வன்முறைகளில் போல்சனாரோவுக்கு எவ்வித பங்கும் இல்லை என்றே அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வந்தனர்.
போல்சனாரோ மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் இணைந்து அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளையும் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை வகுத்ததாகவும், ஜனாதிபதி சில்வாவுக்கு விஷம் அளிக்கவும் திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸை சுட்டுக் கொல்லவும் திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் 34 பேர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அடங்குகின்றனர்
.