நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிப் பதிவு இலக்கம் அல்லது ரி.ஐ.என் இலக்கத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் முறையான முறைமையொன்று தயாரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி பிரதேச செயலகத்தினூடாக ரி.ஐ.என் இலக்கத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்று செவ்வாய் கிழமை நிறைவடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களின் தரவுகளை உள்ளடக்கிய அரச நிறுவனங்களின் ஊடாக ரி.ஐ.என் இலக்கத்தை விரைவாக வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் வரி செலுத்துபவர் “ஒரு நிலையான நாட்டின் வலுவான குடிமகன்” என்று அங்கீகரிக்கப்படுகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் இத்தகைய அணுகுமுறையில் மாற்றம் செய்வது முக்கியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்