இந்தியாவின் ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் கணவனுடைய கள்ளகாதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த மனைவி விஷப்பாம்பை வைத்து கணவனை கொலை செய்துள்ளார்.
கோதாவரி பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது – 42) என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் மனைவி லலிதா மற்றும் பிரவீனுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்த நிலையில் இவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களுடைய விவகாரம் மனைவிக்கு தெரிய வந்த நிலையில் இவற்றை கைவிடும் படி மனைவி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் கணவர் சட்ட ரீதியற்ற உறவை முறித்து கொள்ளாமல் தொடர்ந்த நிலையில் அவரை கொலை செய்வதற்கு லலிதா திட்டம் தீட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்யும் சுரேஷ் என்பவரின் உதவியை நாடினார். கணவரை கொன்றால் பிளாட் எழுதிக் கொடுப்பதாக கூறியதாகவும் அதற்கு சுரேஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த 10 ஆம் திகதி இரவு பிரவீன் மது போதையில் வீட்டில் தூங்குவது குறித்து லலிதா சுரேஷ்க்கு தகவல் தெரிவித்ததையடுத்து சுரேஷ் தனது நண்பர்களுடன் வந்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் இயற்கை மரணமாக இருக்க வேண்டும் என்பதால் விஷப்பாம்பை கொண்டு பிரவீனை கடிக்க வைத்துள்ளனர். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கணவர் இறந்தார்.
இதனையடுத்து கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக லலிதா கூறி அனைவரையும் நம்ப வைத்தார். ஆனால், மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரவீனின் பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் லலிதா, கணவரை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 6 பேரை பொலிசார் கைது செய்தனர்.