-கிரான் நிருபர்-
கோறளைப்பற்று வாழைச்சேனை நாசிவன்தீவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் அனைத்திலும் பாதிக்கப்பட்டிருந்த நாசிவன்தீவு கிராமத்தை சேர்ந்த 465 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் இன்று செவ்வாய் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
பெரண்டினா நிறுவனத்தின் வாழைச்சேனை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் க. அமலினி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், பெரண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் பி.எம்.ரகிம், அமைச்சரின் செயலாளர் த.தஜிவரன், கிராம உத்தியோகத்தர் ம.டிறோன், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் கி.சுரேஸ், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள் .
நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தான் சிறையில் இருந்த காலத்தில் இந் நிறுவனம் சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து தும்பு தடி கட்டுதல், கயிறு திரித்தல் போன்ற செயல் திட்டங்களை செயற்படுத்தி அதனை கொண்டு வெளியில் விற்று அப் பணத்தினை கொண்டு சிறைச்சாலை நூலகத்துக்கு நூல்களை வழங்குதல் மற்றும் சிறைச்சாலை நலன்புரி விடயங்களிலும் செயற்பட்டதாக அறிந்தேன்.
அத்துடன் குறித்த நிறுவனத்தில் கல்வி,உட்கட்டமைப்பு,விசேட தேவையுடையோருக்கான உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் , இளைஞர், யுவதிகளுக்கு வாழ்வாதார தொழில் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முன்னின்று செயற்படுகின்றது எனத் தெரிவித்தார்.


