-கல்முனை நிருபர்-
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறு குடிசைக் கைத் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் தங்களது குடும்பசீவியத்தை கொண்டு நகர்த்த முடியாது வறுமையில் வாடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கிராமத்தில் பாரம்பரிய ரீதியாக மட்பாண்ட கைத் தொழிலில் முன்னர் பலர் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது இத் தொழிலிலை 55 குடும்பங்கள் செய்துவருகின்றனர். நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக மட்பாண்ட த்திற்குரிய மூலப்பொருட்களான களிமண், பட்டுமண், உரிமட்டை, வைக்கோல் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், குறித்த பொருட்களின் விலையேற்றத்தினால் மட்பாண்ட தொழிலை கைவிடும் நிலைக்கு அம் மக்கள் வந்துள்ளனர்.
பாரம்பரியமாக மட்பாண்ட தொழிலையே தமது வாழ்வாதாரமாக செய்துவரும் குடும்பங்கள் பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக வேறு தொழிலுக்கும் செல்ல முடியாத துர்பாக்கிய நிலையில், அன்றாடம் குடும்ப சீவியத்தை நகர்த்த முடியாது மிகுந்த கஸ்டப்படுகின்றனர்.
அரசாங்கம் இவ்வாறான குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதுடன், இத் தொழிலினை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், என மட்பாண்ட கைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.