-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம் சீரற்ற நிலையில் காணப்படுவதால் அதனை சீராக்குமாறு அனைத்து சிகை அலங்கார உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருகோணமலை நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் கையொப்பமிட்டு அனைத்து சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல பாடசாலை ஒன்றில் பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது மாணவர்களின் சிகை அலங்காரம் சீரற்று காணப்படுவதாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் திருகோணமலையில் பிரபல சமூக ஆர்வலர் சாகுல் ஹமீட் அஸாத் அனைத்து பாடசாலைகள் அதிபர்களின் கையொப்பங்களையும் பெற்று அனைத்து சிகை அலங்கார உரிமையாளர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இக்கடிதத்தில் தற்போதுள்ள சூழலில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிகை அலங்காரம் சீரற்று காணப்படுகின்றது.
பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களது ஒழுக்க விழுமியங்களை பேணுவதில் பாடசாலை நிர்வாகம் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆகவே எமது எதிர்கால சந்ததியினரது ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலையினால் விதிக்கப்பட்ட விதிமுறைகளின் படி சிகை அலங்காரங்கள் மேற்கொண்டு எமக்கு ஒத்துழைப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை, திருகோணமலை நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி ரிஸ்வானி றிபாஸ் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் எஸ். தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பு அதிகாரி ஆகியோர் கையொப்பமிட்டு இக்கடிதத்தை உறுதிப்படுத்தி அனைத்து உரிமையாளர்கள் நடத்துனர்களுக்கும் இக்கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர்.
