மிரிஸ்ஸ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 8,350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் வெலிகம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பலான கடற்கரை பகுதியில் திருவிழா பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மிரிஸ்ஸ W&D ஹோட்டலுக்கு அருகில் குறித்த சந்தேகநபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சிறிய ரக ஒற்றைச் சுடும் 12 போர் (12-bore) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, இரண்டு 12 போர் தோட்டாக்கள் மற்றும் 8,350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிரிஸ்ஸ, பொலட்டுமோதர, தாவனியகஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வெலிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களின் மூலத்தை கண்டறிவதற்கும், சந்தேகநபர் வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










