பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார்.
விபத்தில் சிக்கிய படகில் 6 கடற்றொழிலாளர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
கடந்த 15 ஆம் திகதி புறப்பட்ட குறித்த படகானது, இன்று மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது பேருவளை கடலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காணாமல் போன நபர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (19.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளிலும் கடல் வழிப் போக்குவரத்திலும் ஈடுபட வேண்டாம் எனவும் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்
காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு காலி மற்றும் ஹம்பாந் தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் கவனமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.