-பதுளை நிருபர்-
பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மடுல்சீமை ஊவகெல பகுதியில் 15 14 லயன் குடியிருப்பில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 21 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் ஊவகெலை தமிழ் வித்யாலயத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மடுல்சீமை டூமோ பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 154 பேர் இடம்பெயர்ந்து கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் களத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .
இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர குடியிருப்பினை அமைப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடனும் பெருந்தொட்ட நிர்வாகத்தினருடனும் தொலைபேசியில் கலந்துரையாடினார். மேலும் அவர்களுக்குரிய நிவாரண உதவிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்
அத்துடன் குறித்த மக்களுக்கு கோதுமை மாவும் பாராளுமன்ற உறுப்பினரால் கையளிக்கப்பட்டதுடன் கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்கள் தங்களுக்கு பற்பசை, சவர்க்காரம், பற்தூரிகை என்பன வேண்டும் என கூறியதை தொடர்ந்து சிறார்களுக்கு அவற்றையும் பெற்று கொடுத்தார்.
தொடர்ந்தும் சீரற்ற காலநிலையின் விளைவாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகவே அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று புதன்கிழமை வடிவேல் சுரேஷ் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்