பெண்ணொருவரை விடுதியில் தடுத்து வைத்து நால்வருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்தை ஓமத்த வீதியில் உள்ள விடுதி ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த யுவதியின் காதலன் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து இரண்டு நாட்கள் குறித்த பெண்ணை அறையில் தடுத்து வைத்து நால்வருக்கு விற்பனை செய்துள்ளான்.
இது தொடர்பில் பெண் ஒருவர் பணத்திற்காக தனிநபர்களுக்கு விற்கப்படுவதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதன்படி, சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு அதிகாரிகளும் இணைந்து குறித்த பெண்ணை பொறுப்பேற்றதையடுத்து விடுதியின் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், அவர் தற்போது வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் காதலன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்