தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி புதிதாக இயற்றப்பட்டு பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள உத்தேச நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தை பயன்படுத்தி ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு முயற்சிப்பதாக சட்டத்தரணி பவாணி பொன்சேக்கா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள மன்றேசா மண்டபத்தில் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியளாலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் ஒன்லைன் சேஃப்டி பில் என்பவற்றை விலக்கி அதற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பி.ரி.ஐ(PTI) மிகவும் மோசமான நிலைமையை நாட்டிற்கு கொண்டு வரும் எனவும் குறித்த சட்டத்தின் பாதகங்கள் பற்றியும் விளக்கப்பட்டது.
மேலும் இந்த சட்டமானது எதிர்வரும் 22,23 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவுள்ளதாகவும் இந்த சட்டத்தின் பாதக தன்மையினை அனைத்து தரப்பினருக்கும் உணர்துவதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


