இலங்கையில் பயன்படுத்தப்பட்ட ஈய-அமில மின்கலங்களை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) கவலை வெளியிட்டுள்ளது. முறையான அகற்றல் நடைமுறைகள் இன்றி ஆண்டுதோறும் 5,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான கந்தக அமிலம் சுற்றுச்சூழலில் கலப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில், பயன்படுத்தப்பட்ட மின்கலங்களிலிருந்து வெளியேறும் கந்தக அமிலம் மண்ணிலும் சுற்றுச்சூழலிலும் கலப்பது இலங்கையில் பெரும் கவலைக்குரிய விடயமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மின்கலங்களை மறுசுழற்சி செய்யும் செயற்பாட்டின்போது உருவாகும் கழிவுகள், குறிப்பாக உருக்குச் செயல்முறையில் எஞ்சும் கழிவுப் பொருட்கள் மற்றும் கைவிடப்படும் அமிலம் ஆகியவற்றில் ஈயம், காட்மியம், ஆர்சனிக் போன்ற நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் 2,000 இற்கும் அதிகமான உத்தியோகபூர்வ மற்றும் முறைசாரா ஈய உருக்குத் தளங்கள் இயங்குவதாகவும், அவற்றில் போதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது மின்கல அமிலம் மற்றும் கழிவுகளை அகற்றும் நடைமுறைகள் முறையாகக் கண்காணிக்கப்படாமையும் ஒழுங்குபடுத்தப்படாமையும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மின்கல அமிலம் மற்றும் கழிவுகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான முறையான பொறிமுறையொன்றை நிறுவுவதுடன், நடைமுறையிலுள்ள சுற்றுச்சூழல் சட்டங்களைத் தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மைய தலைவர் ஹேமந்த விதானகே தலைமையில் இணையவழியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது இந்த விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்தியாவின் Toxics Link அமைப்பைச் சேர்ந்த அல்டா டுபே மற்றும் Ceylon Waste Management தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுதேஷ் நந்தசிறி ஆகியோரும் இதில் விளக்கங்களை வழங்கினர்.
இதற்கிடையில், ஈய நச்சுத்தன்மை தடுப்புக்கான உலகளாவிய செயல் வாரத்தின் ஒரு பகுதியாக, ஒக்டோபர் 18 முதல் 24ஆம் திகதி வரை இலங்கையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் நடத்தியுள்ளது. “கண்டறிதலிலிருந்து தடுப்பை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், மின்னணுக் கழிவுகள் மற்றும் ஈயத் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கும் கொலன்னாவை நகர சபையின் கழிவகற்றல் பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக, ஈயத்தின் தாக்கம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எச்சரித்துள்ளது. ஈயத்துக்கு ஆளாகும் எந்தவொரு அளவையும் பாதுகாப்பானதாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, ஈய நச்சுத்தன்மையிலிருந்து பொதுமக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.










