-பதுளை நிருபர்-
தோட்டத் தொழிலாளர்களின் மேல் தாக்குதல் நடத்துவதற்கு எந்த அதிகாரிக்கும் உரிமை கிடையாது இதே மனித உரிமை மீறல் நிலைமை தொடர்ந்தால் தோட்ட பங்களாக்களில் இருந்து அதிகாரிகளும் விரட்டப்படுவார்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரித்துள்ளார்.
லுணுகலை-ஹொப்டன் பங்களோ டிவிசனில் தோட்டத் தொழிலாளர் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலுக்கு இலக்கான தொழிலாளி ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நிலைமை தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததை அடுத்து தொழிலாளியை தாக்கிய தோட்ட அதிகாரிகள் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளின் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் தொடர்ந்தால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக அமையும், தொழிற்சங்க போராட்டங்களுக்கு அடுத்தபடியாக தோட்ட அதிகாரிகளை தோட்டங்களில் இருந்து விரட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் அத்தகைய சூழ்நிலைக்கு இடம் தராது தோட்ட அதிகாரிகளும் மனிதாபிமான ரீதியில் நடந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரித்துள்ளார்.