தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக புதிய சம்பள நிர்ணய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கட்டளையிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளம் வழங்காமையினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்றினால் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, கலாநிதி சோபித ராஜகருண மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நயன்தாரா பாலபடபெந்தி மன்றில் தெரிவிக்கையில், சம்பளம் தொடர்பாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த சம்பள நிர்ணய சபையின் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எனவே புதிய சம்பள நிர்ணய சபையொன்றை நியமித்ததன் பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் மன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










