தொல்பொருட்களுடன் மூவர் கைது-அநுராதபுரத்தில் புத்தர் சிலை உட்பட பெறுமதிமிக்க தொல்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர்கள் மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அநுராதபுரம் இபலோகம முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் இபலோகம பொலிஸ் பிரிவின் கலாவெவ கடவற தேவாலயத்திற்கு அருகில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன் தங்க நிறத்திலான புத்தர் சிலை ஒன்றையும் மாணிக்க கற்களுக்கு சமமான எட்டு கற்கள் மற்றும் சந்தேக நபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய வான் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் பண்டார கொஸ்வத்த மற்றும் மாழுலிய பகுதியைச் சேர்ந்த 31,41,47 வயதுடையவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேக நபர்களையும் கைப்பற்றிய பொருட்களையும் அதிரடிப்படையினர் இபலோகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்தனர்.