நவகமுவ மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய 07 சந்தேகநபர்களும் இன்று சனிக்கிழமை காலை நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த துன்புறுத்தல் தொடர்பிலான காணொளி நபரொருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.