லுனுகம்வெஹர வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
அசங்க சம்பத் (வயது – 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வேட்டையாடிய குழுவொன்று வனவிலங்கு அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். இதன்போது வனவிலங்கு அதிகாரிகளும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் செல்ல முயன்ற வேளை அவர்களை துரத்திச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
காயங்களுடன் மீட்கப்பட்டவர் வனவிலங்கு அதிகாரிகளால் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதேவேளை, மீன் பிடிக்கச் சென்றவரையே வனவிலங்கு அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.