ஹம்பந்தோட்டை – மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத தரப்பினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் மோட்டார்சைக்கிளை செலுத்திய 39 வயதான நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபரின் மகனும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 வயதான மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த சிறுவன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.