-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 1537 குடும்பங்களைச் சேர்ந்த 4385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 435 குடும்பங்களைச் சேர்ந்த 1390 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதென திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பெறப்பட்ட புள்ளி விபரத் தகவலின் படி சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேரும், மூதூர் பிரதேச செயலகத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த 2574 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும், மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 06 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 177 குடும்பங்களைச் சேர்ந்த 617 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 338 குடும்பத்தைச் சேர்ந்த 948 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.