-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளிகளை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நோயாளியை தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை எனவும் இதனால் நோயாளியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் களங்களில் நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறையின் காரணமாக தரையில் காட்போட் அட்டைகளை விரித்து படுக்க வேண்டி இருப்பதாகவும் நோயாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் மருந்து மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவும் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் நேயாளிகள் விசனம் வெளியிடுகின்றனர்.

