திருகோணமலை, சீனன்குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரி6 ரக விமானம் ஒன்று நேற்று மு.ப. 11.27 மணியளவில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விமானத்தில் பயணித்த பயிற்சியாளரும், பயிற்சி விமானியான பெஷான் வர்ணசூரிய எனும் இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை விமானப்படையின் சீனக்குடா விஞ்ஞானப் பிரிவு கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் பிரி6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணையை நடத்த விசேட விசாரணைக் குழுவை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

